வெள்ளி, 6 நவம்பர், 2015

தமிழறிஞர் பேராசிரியர் (சவுந்தர) மகாதேவன் ( 1974) : சென்னைப் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்,


  ...நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பன்முகத் திறனுடைய ஒரு இளம் தமிழாய்வாளர். எழுத்தாளராக ... கவிஞராக ... பேச்சாளராக ... ஆய்வாளராக ... பேராசிரியராகத் திகழ்கிறார்.

பாளை தூய சவேரியார் கல்லூரியில் தமிழில் முதுகலை, எம் ஃபில் பட்டங்களைப் பெற்ற இவர், நெல்லை மதிதா இந்துக்கல்லூரியில் பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களின் வழிகாட்டுதலில் 'வண்ணதாசன் படைப்பிலக்கியங்கள் ' பற்றி ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தனது 20 வயதில் இவர் பாரதப் பிரதமரின் 'சத்பவனா தேசியக் கட்டுரையாளர் விருதையும்', இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் ' தேசிய அங்கீகரிப்புச் சான்றிதழையும் ரூ. 10,000 முதல் பரிசினையும்' பெற்றவர். 21 ஆவது வயதில் தஞ்சையில் நடைபெற்ற 8 ஆம் உலகத்தமிழ்மகாநாட்டின்போது நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் 'புதுக்கவிதைகளில் சமுதாயநோக்கு' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டிக்குக் கட்டுரை எழுதி, மாநிலத்திலேயே முதலிடம் பெற்று, தமிழக முதல்வரின் தங்கப் பதக்கத்தை வென்றார்.

கட்டுரைப் போட்டி மட்டுமல்லாமல், கவிதைப்போட்டி, ஆய்வுக்கட்டுரைப்போட்டி ஆகியவற்றிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவைபோன்று பல விருதுகளைப் பெற்ற இவர், 'இணையத்தமிழ்', மகாபாரதி இணையக்கவிதைகள்', 'தேமதுரத்தமிழ்' 'பொய்கையாழ்வார்', 'பூதத்தாழ்வார்', 'வண்ணதாசன்' ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். ஊடகத் துறையில் இளம் வயதிலிருந்தே பெரும்பங்காற்றிவருகிறார்.

குறிப்பாக, இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏராளமான கட்டுரைகளைத் 'தினமலர்' இதழில் தொடர்ந்து எழுதிவருகிறார். தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிலும் தொடர்ந்து தனது பங்களிப்பை அளித்துவருகிறார். தமிழ் இணையக்கல்விக்கழகத்திற்காக ஏராளமான மின்னூல்களையும் கல்லூரித்தமிழ்ப் பாடத்திட்டக்குழுவின் சார்பாக ஆறு நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் உதவிபெற்று, வண்ணதாசனின் படைப்பிலக்கியங்களில் இயற்கைபற்றி ஒரு குறு ஆய்வுத்திட்டத்தைச் செய்துமுடித்துள்ளார். வலைப்பூக்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றில் தொடர்ந்து தனது பங்களிப்பைச் செம்மையாகச் செய்துவருகிறார்.

நெல்லையில் பேராசிரியர்கள் சிவசு, கட்டளை கைலாசம் ஆகியோருடன் இணைந்து பல்வேறு இலக்கியக் கூட்டங்களை நடத்திவருகிறார்.

http://namipikai.blogspot.in/ என்ற வலைப்பூவில் தொடர்ந்து தரமான கட்டுரைகளை அளித்துவருகிறார். மலேசியாப் பல்கலைக்கழகத்தின் கருத்தரங்கு ஒன்றில் ஆய்வுரை வழங்கியுள்ளார்.

 இளம் ஆய்வாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த 41 வயது இளைஞர் செயல்பட்டுவருகிறார். கடந்த சில மாதங்களாக இவரது தொடர்பு எனக்கு கிடைத்துவருகிறது.

தற்போது இவர் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார். தமிழ் விக்கிபீடியாவில் எழுத்தாளர்கள்பற்றிய குறிப்புகளில் இவரும் இடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மின்னஞ்சல் முகவரி:mahabarathi1974@gmail.com

நன்றி: சென்னை பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர்,தமிழக அரசின் சிறந்த  கணினித்தமிழ் விருது பெற்ற ஆய்வறிஞர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்


 



செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா



பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா மற்றும் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி நூல்   வெளியீட்டுவிழா
 
பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா மற்றும் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் எழுதியுள்ள நபிகள் நாயக மான்மிய மஞ்சரி நூல்   வெளியீட்டுவிழா 4.8.2015 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

 தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.

கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி தலைமையுரையாற்றினார். 

கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்துரை வழங்கினார். சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் எழுதி, வரலாற்றறிஞர் செ. திவான் பதிப்பித்துள்ள நபிகள் நாயக மான்மிய மஞ்சரி எனும் நூலை கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் டேவிட் கிறிஸ்டியான் அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை ஆற்றினார்.

நீதியரசரின் வாழ்த்துரை

அவர் தன் வாழ்த்துரையில் “ இஸ்லாமிய இலக்கியங்களை இளையதலைமுறையினரிடம் கொண்டுசெல்லும் சீதக்காதி தமிழ்ப் பேரவையின் பணிகளைப் பாராட்டுவதாகவும், 92 அரியநூல்களை எழுதியுள்ள வரலாற்றறிஞர் செ.திவானின் நூல்கள் புதியநோக்கில் வரலாற்றினைத் தருவதாகவும் தெரிவித்து,அவருடைய ஔரங்கசீப் தொடர்பான வரலாற்று நூல் பல புதிய உண்மைகளைத் தந்ததாகவும் குறிபிட்டு நபிகள் நாயக மான்மிய மஞ்சரி எளியநடையில் அமைந்த அழகான நூல்,தொடர்ந்து நல்ல நூல்களை வெளியிடும் சீதக்காதி தமிழ்ப் பேரவைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.

 விழாவில் தமிழ்அறிஞர் வீ.செந்தில் நாயகம் ‘மனிதம் வளர்த்த தமிழ்’ என்ற பொருளில் சிறப்புரையாற்றினார்.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள்  அல்ஹாஜ் கே.ஏ.மீரான் மைதீன்,அல்ஹாஜ் எம்.கே.எம். முகமது நாசர்,முன்னாள் முதல்வர்கள் பேராசிரியர் முகமது பாசி, பேராசிரியர் கா.முகமது பாருக்,மேனாள் வணிகவியல் துறைப் பேராசிரியர் கலீலூர் ரகுமான்,மேனாள் வனத்துறை அலுவலர் சேக் முகைதீன்,எழுத்தாளர் நாறும்பூநாதன்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மருத்துவஅலுவலர் டாக்டர் அய்யனார்,தமிழ்முழக்கப் பேரவைப் பொறுப்பாளர் ஆவுடையப்பன்,நல்லாசிரியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அ.மு.அயூப்கான் நன்றிகூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரித் தமிழ்த்துறை செய்திருந்தது.


படத்தில்: பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழாவில், வரலாற்றறிஞர் செ. திவான் பதிப்பித்துள்ள நபிகள் நாயக மான்மிய மஞ்சரி எனும் நூலை கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் டேவிட் கிறிஸ்டியான் அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்.

புதன், 8 ஜூலை, 2015

நலம் நலமறிய ஆவல்: முனைவர் சௌந்தர மகாதேவன்


இல்லமெனும் இனிய பள்ளி: முனைவர் சௌந்தர மகாதேவன்



சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இப்தார் நோன்புத் திறக்கும் விழா


வியாழன், 24 ஏப்ரல், 2014

பாளையங்கோட்டை தூய சவேரியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டம்



















அகரம் கற்றுத்தந்த தொடக்கப் பள்ளிக்குச் சமீபத்தில் சென்று வந்தீர்களா?

முப்பதெட்டு ஆண்டுகளுக்கு முன் நான் படித்த பாளையங்கோட்டை தூய சவேரியார் மழலையர் மற்றும்

தொடக்கப்பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டம்..எப்படியோ முகவரி கண்டுபிடித்து எங்களுக்குப் பாடம் சொல்லித்தந்த ராஜம் மிஸ் தொடர்பு கொண்டார்கள்..

மனம்  முப்பதெட்டு ஆண்டுகளுக்கு முன் இறக்கை கட்டிப்பறந்தது. பாளையங்கோட்டை மிலிட்டரிலைன் அருகில் வாட்டர்டாங் கடந்து நடந்தால் தெற்குக்கடைவீதி வரும்.நடுவில் வானுயர்ந்த சவேரியார் சர்ச்..ஏசுநாதர் சிலையை நான் முதன்முதலாகப் பார்த்தது அங்கேதான்.

ஆறுஅடுக்கு உயரகோபுரத்தின் மீது மிகப்பெரிய ஆலயமணி இன்றும்உண்டு பூஜை நேரத்தில் ஒல்லியாய் ஜிப்பா அணிந்த மனிதர் அதன் நடுவில் உள்ள கயிற்றினைப் பிடித்துத் தொங்குவார்.

மணியின் நடுவில் உள்ள நா வெண்கல மணியில் டாணென்று அடிக்கும்போது சத்தம் காதைப்பிளக்கும்,அப்போது அந்த தேவாலயத்தில் இருக்கும் புறாக்கள் படாரென்று ரெக்கையை விரித்துப் பறப்பதைக் காணக்காத்துக் கிடப்போம்.

யாரேனும் இறந்து அடக்கபூசைகுக் கொண்டுவரும்போது மணி விட்டு விட்டு ஒலிக்கும்.1978 ஆம் ஆண்டு நான் யூ.கே.ஜி.மாணவனாக அந்தப்பள்ளியில் சேர்ந்தேன்..

முட்டை ஓட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்த குஞ்சுப் பறவை திடீரென்று விட்டுவிடுதலையாகி விரிவானில் பறந்த நிலையாகவே அமைந்தது.காதில் தங்கவளையத்தோடு குட்டிக்குட்டிக் குழந்தைகளான எங்கள் வகுப்புத் தோழர்களை மடியில் அமர்த்தி எழுதச் சொல்லிக்கொடுத்த எங்கள் மரகதம்மிஸ் எனும் அன்பாளரைக் கண்டதும் அந்தப் பள்ளியில்தான்.

அந்த அன்பையும் பரிவையும் இன்றுவரை என் மாணவர்களிடம் காட்டிவருவதன் காரணமும் அவர்கள்தான். தூய சவேரியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டம்.

பள்ளிக்குள் நுழைகிறேன்.அதே போல் எந்த முகப்பூச்சும் அற்று இயல்பாய் இருந்தது பள்ளி.பலகைகளால் மறைக்கப்பட்ட வகுப்பறைகள் குட்டிகுட்டியாய் நீள்இருக்கைப்பலகைகள்.அழகான தமிழ் எழுத்துகள்..

இலட்சரூபாய் செலவளித்தாலும் எந்த ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களாலும் பதிலீடு செய்யப்பட முடியா அழகியல் சித்திரமாய் என் அன்புப் பள்ளியின் கவின்மிகு வகுப்பறை அமைந்தது.

அதே போன்றதொரு சின்னக்குழந்தையான என் மகனோடு அன்று அந்த வகுப்பறையில் இருந்தேன் என்பது நெகிழ்வான நிகழ்வாய் அமைந்தது.

இன்பமும் பதற்றமும் கலந்த புதுஅனுபவம் அது.ஒரு மாதத்திற்குமுன் முகநூல் நண்பர் திரு.செல்வராஜ் அவர்களின் அன்பு அழைப்பில் திருநெல்வேலி,தச்சநல்லூரில் உள்ள வேதிக் வித்யாச்ரம் பள்ளி ஆண்டிறுதிவிழாவில் பேசியபோதுகூட இயல்பாகத்தான் பேசினேன். 

முப்பதெட்டு ஆண்டுகளுக்குப் பின் அந்தப்பள்ளி என்னைப் பாதிக்கிறது என்றால் காரணம் அன்று கல்வி இயல்பாய் மிதமாய் அன்பாய் அழகாய் போதிக்கப்பட்டது.

இன்று நெருக்கடியும் பெற்றோரின் அளவுக்கதிகமான அழுத்தமும் பொருளாதாரத்தோடு தொடர்புபடுத்தப்பட்ட வணிகமயமும் மாணவர் ஆசிரியர் உறவை எதிர்நிலையில் கொண்டுசென்றுவிட்டதாகவே நினைக்க வேண்டியுள்ளது.

சேவியர் பள்ளியில் இடம் கிடைத்துவிட்டால் வாழ்வின் உயர்தரத்தில் முன்னேறிவிடலாம் என்ற எண்ணத்தில் இத்தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்புவரை பயின்று அதன்பின் அதே வளாகத்தில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் இரண்டாண்டுகள் பயின்று அதன்பின் நுழைவுத்தேர்வு எழுதி தூய சவேரியார் பள்ளிக்குப் படிக்கச் சென்ற ஆயிரமாயிரம் மாணவர்கள் திருநெல்வேலில் உண்டு..

தமிழகத்தின் பல பகுதிகளில் கல்விபற்றிய  விழிப்புணர்வு இல்லாத ஆங்கிலேயர் ஆட்சி செய்துகொண்டிருந்த அந்த முன்னைப்பழைய நாட்களிலேயே சேசுசபை அருட்தந்தையர்களால்  தூய சவேரியார் பள்ளி தொடங்கப்பட்டதும்,சாராள் தக்கர் கல்லூரி,தூய யோவான் கல்லூரி,மதுரை திரவியம் தாயுமானார் இந்துக் கல்லூரி என்று நூறாண்டுகள் நூற்றைம்பதாண்டுகள் கடந்த கல்வி நிறுவனங்கள் கொண்ட மாவட்டம் நெல்லை மாவட்டம்.

அவர்களின் உருவில் அந்தப் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை அந்தோனி சாமி அடிகளார்,என் அன்பு நண்பர் டாக்டர் டோனி தம்பி ராஜா ஆகியோருடன் பொன்விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினேன்

.உள்ளம் நெகிழ்வின் காரணமாய் பத்துநிமிடத்திற்கு மேல் என்னால் பேசமுடியவில்லை..பள்ளி நினைவுகளும் பாடம் கற்றுத்தந்த அந்த எழுத்தறிவித்த இறைவன்களுக்கு முன் நான் அன்றும் மாணவனாகத்தான் இருந்தேன்.

புதன், 16 ஏப்ரல், 2014

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரியில் இஸ்லாமிய வினாடிவினா



பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரியில் ஏப்ரல் 15 அன்று காலை 11 மணியளவில் அரபுத்துறை சார்பில் இஸ்லாமிய வினாடிவினா நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துத் தலைமையுரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் மு.முகம்மது சாதிக் வாழ்த்திப் பேசினார். 

கல்லூரிஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர் ,பொறியாளர் அல்ஹாஜ் ஆதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கல்லூரியின் முன்னாள் அரபுத் தலைவர் பேராசிரியர் அப்துல் ஹையு வினாடி வினாப் போட்டியை நடத்தினார்.


வெற்றிபெற்ற மாணவமாணவியருக்கு கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.