சனி, 7 செப்டம்பர், 2013

நடமாடும் புத்தகவிற்பனையாளர்கள் "சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி"



ரயில்பயணங்களில் தவறாது வந்துவிடுகிறார்கள் எளிமையான நடமாடும் அந்தப் புத்தகவிற்பனையாளர்கள்.

மணியாச்சி தாண்டிய உடன் அவர்கள் ஏதாவது ஒரு பெட்டியில் உரத்த கைப்பையுடன் சிநேகத்தோடு ஏறிவிடுகிறார்கள்.

வண்டி வேகமெடுத்து பக்கவாட்டில் மரங்கள் விரைவாக ஓடக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் உள்ள பெட்டிகளில் அவர்கள் சுவாரசியமான கதைகளை தெனாலிராமன் படத்தோடு,
மரியாதைராமன் படத்தோடு,அக்பர் பீர்பால் படத்தோடு,விக்ரமாதித்தன் படத்தோடு அக்குழந்தைகள் முன்வைத்துவிட்டு அடுத்த பெட்டிக்கு நகர்கிறார்கள்.

முகத்தில் ஆவல் பொங்க அந்த நூல்களை அக்குழந்தைகள் கையில் பற்றுகிறார்கள்.பத்துரூபாய் விலையில் அவர்களை மகிழ்சிக்குள்ளாக்க அந்த இனிமையான நடமாடும் புத்தகவிற்பனையாளர்களால் முடிகிறது.

பாலிதீன் கவர்களில் பொதியப்பட்டு புத்தகக்கடைகளில் விற்கப்படும் நூல்களுக்கு மாற்றாக படித்துத் தேர்வுசெய்யும் சுதந்திரத்தை அவர்கள் வழங்குகிறார்கள்.
தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத ரயில்வண்டி அறைகள் வாசிப்பு அறைகளாக ஒரு வினாடியில் மாற்றம்பெறுகின்றன.

அக்கதைகளுக்குள் இருந்து புறப்படும் விக்கிரமாதித்தன் நம் மனக்கிளையில் தொங்கிக்கொண்டு பயணிக்கிறார்கள்.மணியாச்சி பருப்புவடை,கடம்பூர்போளி,கோவில்பட்டி கடலைமிட்டாய்,வரிசையில் வந்தாலும் பயணத்தைப் படிப்புப் பயணமாக அந்தப் புத்தகவிற்பனையாளர்களால் முடிகிறது.

போகிறபோக்கில் அருமையான செயல்களைச் சத்தமில்லாமல் செய்துவிட்டு நகர்கிற விளம்பரமில்லா விந்தை மைந்தர்கள் நித்தமும் நம்மோடு பயணிக்கத்தான் செய்கிறார்கள்.

நாமும் அவர்களும் பேசாமலும் பேசப்படாமலும்.நெல்லை விரைவுவண்டி ஓடிக்கொண்டிருகிறது அனைவருக்கும் பொதுவாக எப்போதும்போல் இயல்பாக

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி