செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அறக்கட்டளைச் சொற்பொழிவு




பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது.

இஸ்லாமியத் தமிழறிஞர் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் பெயரில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கட்டளையின் சார்பில் 4.2.14 அன்று காலை 11 மணிக்கு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது.

தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.

கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி அறக்கட்டளைச் சொற்பொழிவைத் தொடங்கிவைத்துத் தலைமையுரை ஆற்றினார்.
 
 கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் எம்.முகமது சாதிக் வாழ்த்துரை வழங்கினார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் கே.எஸ்.மீரான் முகைதீன் ,முன்னாள் முதல்வர் பேராசிரியர் பொ.பீர்முகமது,பொறியாளர் ஆதம்,நல்லாசிரியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரின் பேரனும் சாம்பியா நாட்டின் புனித ஜூடு பல்கலைக்கழகத் துணைத் துணைவேந்தருமான முனைவர் எச்.செய்யது உதுமான் பாவலர் நினைவுகள் குறித்துப்பேசி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் சிறப்புவிருந்தினராக மதுரை,வக்பு வாரியக் கல்லூரித் தமிழ்த் துறைத்தலைவரும் மொழிபெயர்ப்பு அறிஞருமான முனைவர் கா.சாகுல் ஹமீத் கலந்துகொண்டு

 “’இஸ்லாமியப் புதினங்கள் காட்டும் வாழ்வியல் நெறி” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றும்போது ‘’தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி எண்பதுகளில் தொடங்கி வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது.தமிழின் முதல் நாவலான “பிரதாப முதலியார் சரித்திரம்”எனும் நாவலை எழுதியவர் மாயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளை நீதிபதி,அதே காலகட்டத்தில் இலங்கையில் தோன்றிய நாவல் அசன்பே சரித்திரத்தை யாரும் கண்டுகொண்டு இலக்கியவரலாற்றில் பதிவு செய்யவில்லை.
கதைகேட்கும் ஆர்வத்தின் வெளிப்பாடே நாவல் வாசிக்கும் பழக்கம்.தோப்பில் முகமது மீரான் ஒரு கடலோர கிராமத்தின் கதையை வேறுபட்ட புதிய நோக்கோடு படைத்தார்.
அஞ்சுவண்ணம்தெரு,சாய்வுநாற்காலி,கூனன்தோப்பு,ஆகியனஅவரின் யதார்த்த நாவல்கள்.திருநெல்வேலியில் வசித்த கருணாமணாளன் குறிப்பிடத்தக்க நாவல் ஆசிரியர்.கீரனூர் ஜாகிர் ராஜாவின் மீன்காரத்தெரு தெருவை வைத்து பாகுபாடு செய்யும் அரசியலை முன்வைக்கிறது.இஸ்லாமிய நாவல் இலக்கியம் யதர்த்தத்தை முன்வைக்கிறது.விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் கொடுமைகளை முன்வைக்கிறது.” என்று பேசினார்.


தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் அ.மு.அயுப்கான் நன்றி கூறினார். 

தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.

படத்தில்
1.பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வில் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி அறக்கட்டளைச் சொற்பொழிவைத் தொடங்கிவைத்துத் தலைமையுரை ஆற்றுகிறார்.அருகில் மதுரை,வக்பு வாரியக் கல்லூரித் தமிழ்த் துறைத்தலைவரும் மொழிபெயர்ப்பு அறிஞருமான முனைவர் கா.சாகுல் ஹமீத் , ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் கே.எஸ்.மீரான் முகைதீன், கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் எம்.முகமது சாதிக் மற்றும் பலர்.






செய்தி:
முனைவர் ச.மகாதேவன்
தமிழ்த்துறைத்தலைவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக