ஞாயிறு, 7 ஜூலை, 2013

கல்லில் கவி சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி



கல்லில் கவி எழுத முடியுமா ?ஷாஜகானுக்கு முடிந்திருக்கிறது .கடந்த ஆண்டு எங்கள் கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் குடும்பத்தோடு ஜெய்ப்பூர் ,ஆக்ரா ,டெல்லி இன்பச் சுற்றுலா சென்றோம் .தொடர் வண்டியில் ஆக்ரா பயணம் .வழியெங்கும் பழைமை மாறாத கிராமங்கள் .சாணி தட்டப்பட்ட சுவர்கள் .பொங்கி வழிந்த நதிகள் .பூசாத சுவர்களோடு ஆக்ரா எங்களை வரவேற்றது .நகரெங்கும் வறுமையின் சாயல் .இரவு நேரம் சாலை நிசப்தமாய் இருந்தது .இரவு நேரம் நிலா வெளிச்சத்தில் தாஜ்மஹால் காணலாமே என தங்கிய விடுதியிலி ருந்து நடந்தோம் .பாதுகாப்பு காரணங்களுக்காக இப்போது யாரும் செல்ல இயலாது என்று மறுக்கப் பட்டோம் .எப்போது விடியும் என்று காத்திருந்தோம் .
தங்கிய விடுதிக்கு அருகில் தாஜ் இருந்தது .வாகனப் புகையால் தாஜ்மகால் பாதிக்கப் படாமல் இருக்க ஒட்டக வண்டிகள் .பேட்டரி கார்கள் .ஒட்டக வண்டியில் ஏறினோம் .மாட்டு வண்டியை விட உயரமாக அழகாக இருந்தது .
பயணங்கள் எப்போதும் புதிதானவை புதிரானவை .
உலக அதிசயத்தை நோக்கி ஊர்ந்தது அந்த உன்னத வண்டி .
பேட்டரி கார்கள் கடந்து பறந்தன .
சில பயணங்கள் மெதுவாகத்தானே  மேற்கொண்டாக வேண்டும் .
நுழைவாயில் வந்தது .
அத்தனை பேரும் பரிசோதிக்கப்பட்டோம் .
சோதனை முடிந்து ஓடினோம் .
எதிரே தூரத்தில் சலவை மொட்டாக  தாஜ் மஹால் .
காலை வெயிலில் கண்களைப் பறித்தது .
 வழிந்த தேனடையில் பிழிந்த தேன் சொட்டாய்
என் கண் எதிரே சலவைச் சங்கமம் .
பளிங்கு அதிசயம் ,காதல் மண்டபம் .
தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றியது 
ஒளிமை வீசிய வெண்அதிசயமாய் தாஜ் மஹால் எங்கள் அனைவரையும் சிரித்தது
நெருங்க நெருங்க வேறுவேறு வடிவம் எடுத்து எங்களோடு பேசியது .
உயிர்த் துடிப்போடு சில்லென்று இருந்தது வெண் பளிங்குக் கவிதை .
எத்தனை கோணங்களில் எடுக்க முடியுமோ அத்தனை கோணங்களில் எடுத்த படங்கள்
உங்களுக்காக

சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக