ஞாயிறு, 28 ஜூலை, 2013

திருநெல்வேலி வை.ஆறுமுகம் அவர்கள்




காதறுந்த ஊசி கூடக் கால் முள்ளகற்ற உதவும். எதுவும் வீணில்லை இந்த வாழ்க்கையில்.நகர்ந்து போகிற இந்த மனிதப் பிரவாகத்தில் நாம் நீண்ட தொடர்ச்சியின் கனிவான கண்ணிகள்.ரேசன் கடையில் மண்ணெண்ணை டின்னை நகர்த்துகிற மாதிரி காலம் நம்மை நகர்த்தி நகர்த்தி முன்னெடுக்கிறது.இனம் தெரியாத மனிதர்களோடு சங்கமிக்க வைக்கிறது.மானிட சமுத்திரம் நானெனக் கூவக் கற்றுக் கொடுக்கிறது.உரிமம் பெற்று வருகிற உறவுகளை விட உயிர்மம் பெற்று வரும் உறவுகள் உன்னதமனவையாய் அமையும் ரகசியம் அதுதான்.அயல்நாடுகளுடன் நட்புறவு ஒப்பந்தம் போட அரசுப் பணத்தில் பறக்கிற அதிகாரிகளை விட சாலை நடுவில் ரத்தச் சகதியாய் செத்துக் கிடக்கும் நாயை அகற்றுபவன் அருமையானவன்.மாதம்தோறும் குயில் நண்பர்களோடு ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்லும்போது கண்ட அந்த மனிதர்கள் உன்னதமானவர்கள்.மனவளர்ச்சி குன்றிய நூறு குழந்தைகளைப் பராமரித்து வரும் பெரிய கண்ணாடிபோட்ட அந்த மாமனிதர்,மொழியறியா மனவளர்ச்சிக்குன்றிய இளம்பெண்ணோடு அன்புபாராட்டும் அருட்சகோதரிகள்,மகன்களால்,மருமகள்களால் வீட்டை விட்டு அப்புறப்படுத்தப்பட்ட வயதான பாட்டிதாத்தாக்களை பராமரிக்கும் அந்த கல்லிடைக்குறிச்சி மாமனிதர் இப்படி எத்தனையோ முகம்தெரியாத உன்னத மாந்தர்கள் இந்த உலகிற்கு உயிர்மை தந்து கொண்டிருக்கிறார்கள்.தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளாக வெள்ளிக்கிழமை தோறும் திருநெல்வேலி பேராட்சியம்மன் கோவில் அருகே உள்ள வறியவர்களுக்கு உணவளித்துவரும் தொன்நூற்றைந்தைந்து வயதுப் பெரியவர் வை.ஆறுமுகம் அவர்கள் என்னை வியக்க வைத்த மாமனிதர்.காலையில் நான்கு மணிக்கு எழுந்து யோகா செய்து நூறு தோப்புக்கரணம் போட்டு உடற்பயிற்சி செய்து கடுக்காய் தண்ணீர் ஒரு செம்பு அருந்தி,ஆறு மணிக்கு அப்பர் தேவாரத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினால் நேரம் தெரியாமல் பக்கம் பக்கமாய் எழுதத் தொடங்குகிறார்.உலகம் சுற்றிய தமிழ் அறிஞர்.திருஞானசம்பந்தர் தேவாரத்தை மொழிபெயர்த்து இரண்டாயிரம் பக்க நூலகத் தந்துள்ளார்.ஜி.யூ.போப் மொழிபெயர்த்த திருவாசகத்தை ஆயிரம் பக்க அளவில் மொழிபெயர்த்து அதை நூலாக்கி .ஜி.யூ.போப் கல்லறையில் கண்ணீர் சிந்தி வெளியீட்டு இங்கிலாந்தில் திருவாசகம் குறித்து ஆய்வுரைகள் வழங்கினார்.அமெரிக்காவில் அறிஞராய் போற்றப்பட்டு பெரும் புகழ் பெற்றவர்.தள்ளாத வயதிலும் தமிழ்த்தொண்டு புரிந்து வரும் அய்யா பெரியவர் வை.ஆறுமுகம் அவர்கள் தற்போது அப்பர் தேவாரத்தை மொழிபெயர்த்து வருகிறார்.வறுமை நிலையில் உள்ள ஒரு பெண்குழந்தையை வளர்த்துப் படிக்க வைத்து கல்லூரி ஆசிரியராக உயர்த்தியவர் ஆறுமுகம் அய்யா அவர்கள்.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்கள்நம்முடன் இன்றும் இந்த ஊடக வெளிச்சமும் இன்றி வாழத்தான் செய்கிறார்கள்
செய்தித்தாளில் படம் வராத சேவையாளர்கள் சத்தமில்லாமல் மானுடத் தொண்டு புரியத்தான் செய்கிறார்கள்.


சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

சனி, 27 ஜூலை, 2013

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய விருது வழங்கும் விழா




தற்செயல் நிகழ்வுகள் கல்வெட்டுக்களாய் மனதில் பதிந்து விடுவதுண்டு.அன்றும் அப்படித்தான் நடந்தது.எங்கள் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.முகம்மது சாதிக் அவர்கள் தொலைபேசியில் கேட்டுக் கொண்டபடி திருநெல்வேலி ஆரியாஸ் உணவகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்றேன்.மிகப் பெரிய அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது.முன்னர் அமரச்சொல்லி நீதிமன்றக் கிளையின் மேலாளர் திரு.நாகூர்மீரான் கேட்டுக் கொண்டார்.முதல் வரிசையில் சிங்கம் போன்று அமர்ந்திருந்தது என் ஆசிரியர் திரு.பர்னபாஸ் அவர்கள்.சில நேரங்களில் சிலரைச் சந்திப்பதற்காகவே சில கணங்களைக் காலம் நிறுத்தி வைக்கிறது.நான் எண்பதுகளில் பாளை.தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவனாக அடிஎடுத்து வைத்ததும் சகவகுப்புத் தோழராக இன்று இசையமைப்பாளராகத் திகழும் விஜய் ஆண்டனி அங்கே வந்து சேர்ந்தார்.தேசிய மாணவர் படையில் சேர வேண்டும் என்ற ஆவல் தோன்றக் காரணம் ஆசிரியர் திரு.பர்னபாஸ் அவர்களின் ஆறடி உயர கம்பீரஉருவம்,தெளிவான அழுத்தமான தமிழ் உச்சரிப்பு,இன் செய்து முழுக்கை சட்டை போட்டு கைகளைப் பின்னால் கட்டியபடி அவர் பள்ளி வளாகத்தில் வந்துநின்றால் நாங்கள் பயந்து ஓடியதுண்டு. தேசிய மாணவர் படையில் நான் சேரக்காரணமும் அவர்தான்.என்.சி.சி.சீருடையில் காலை இளம்வெயிலில் அவரைப் பார்ப்பது அழகாக இருக்கும்.பாரதி மீசை,மேல் நோக்கி சீவிய தலைக்கேசம்.பரடுக்கு தாமதமாய் வந்தால் அலுமினியப் பூண்போட்ட கம்பால் மிரட்டுவாரே அன்றி யாரையும் அடித்ததில்லை.சத்தமான குரலை எழுப்பி என்.சி.சி ஆணைகளை அவர் பிறப்பிக்கும் கம்பீரத்தை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். காக்கி சீருடை கசங்கி இருந்தால் அவர் கண்கள் சிவக்கும்.புளி மூட்டையில் வச்சீருந்தையா? என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் என் கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் வழியும்.இரக்கப்பட்டு போடே என்பார்.ஒவ்வொரு மாணவனாய் உற்றுக் கவனிப்பார்.மணல் மூட்டையை அடுக்கி தூப்பாக்கிசுடும் பயிற்சிக்காக எங்களை சேவியர் கல்லூரி மைதானத்திற்கு அன்று அழைத்துச் சென்றிருந்தார்.ஒரு வாரம் பயிற்சி வேறு அளித்திருந்தார்.நிகழ்வுகள் முடிந்து நான் சுட்ட இலக்கு அட்டையைக் கொண்டு வரச்சொல்லிப் பார்த்தார்.என் இலக்கு அட்டையில் ஒரு குண்டுகூடப் பாயவில்லை.பக்கத்து மாணவனின் இலக்கு அட்டையில் குறிதவறாமல் சுட்டிருந்தேன்.இனிமேல் என்.சி.சி பக்கம் வந்தே நடப்பதே வேறு என்று விரட்டி வீட்டார்.அந்த ஆசானை இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து திருநெல்வேலி ஆரியாஸ் உணவகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய விருது வழங்கும் விழாவில் சந்திக்க வைத்தது வாழ்வில் மறக்க இயலாத தருணம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த வாடிக்கையாளர் விருதினை என் ஆசான் திரு.பர்னபாஸ் அவர்கள் பெற அவருக்கு அடுத்து கல்லூரியின் சார்பில் அதே மேடையில் என் ஆசிரியப் பெருந்தகை முன்னிலையில் அப்பரிசினை நான் பெறக்காரணமாய் அமைந்த நீதிமன்றக் கிளை மேலாளர் திரு.நாகூர்மீரான் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்.எழுபத்தைந்து வயதிலும் அதே முறுக்குமீசை அதே நிமிர்ந்த நன்னடை..என்ஆசானே நீங்கள் எப்போதும் முன்மாதிரி.படத்தில் அவர் முன்வரிசையில் அமர நான் அவருக்குப் பின்னால்.. என்றும் அவர் பின்னால்...

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

ஞாயிறு, 14 ஜூலை, 2013

இன்றுடன் தந்தி சேவை நிறைவு !சௌந்தர மகாதேவன்




தந்தி ..என்ற சொல் நம் வாழ்வில் மறக்க இயலா முத்திரைச் சொல் .
விரைவு என்ற சொல்லின் பொருளும் அதுதான் .
தந்தி ஆபிஸ் ஊழியர் எங்கள் தெருவுக்கு வந்து சென்ற பின்
 நிறைய வீடுகளில் அழுகுரல் கேட்டதுண்டு .
ஆண்டாளம்மா மகன் ராணுவத்தில் எல்லைப் போரில் இறந்துபோன செய்தி வந்தது தந்தியில்தான்
நல்ல செய்தியைக் கொண்டுவந்தால் இரண்டு ரூபாய் அன்பளிப்போடு சிரித்தபடி செல்லும் தந்திக்கார ராசுக் குட்டி அண்ணன் ஆண்டாளம்மா வீட்டிலே இருந்து இறுகிய முகத்தோடு விருட்டென்று வெளியேறி ராலி மிதி வண்டியை உருட்டியபடி தலை குனிந்தபடி சென்றதும்
அதன் பின் ஆண்டாளம்மா வீட்டில் பிரளயம் நடந்ததும் இன்றும் நினைவில் இருக்கிறது .
மகன் உடல் கூடப் பார்க்க முடியா அந்தத் தாய் அழுது அழுதே ஒரு மாதத்தில் இறந்து போனதும் தூக்கிப் போடக் கூட ஆள் இல்லாமல் தெருவில் உள்ளவர்கள் தூக்கிப் போட்டதும் 
குலை நடுங்க வைத்த சம்பவங்கள் .
அதிலிருந்து ராசுக் குட்டி அண்ணன் எங்கள் தெருவுக்குள் வந்தால் ஈரக் குலை நடுங்கும் .
1993 டிசம்பர் கடைசியில்  ராசுக் குட்டி அண்ணன் எங்கள் வீட்டின் முன் மிதி வண்டியை நிறுத்தினார் .
சேவியர் கல்லுரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களவை .
மிதிவண்டி கேரியரிலிருந்து தந்தியை எடுத்தார் .
குலை நடுங்க வைத்த சம்பவங்கள் .
அதிலிருந்து ராசுக் குட்டி அண்ணன் எங்கள் தெருவுக்குள் வந்தால் ஈரக் குலை நடுங்கும் .
1993 டிசம்பர் கடைசியில்  ராசுக் குட்டி அண்ணன் எங்கள் வீட்டின் முன் மிதி வண்டியை நிறுத்தினார் .
சேவியர் கல்லுரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களவை .
மிதிவண்டி கேரியரிலிருந்து தந்தியை எடுத்தார் .
ஆண்டாளம்மா வீட்டு சம்பவம் மனதில் நீழலாடியது .
மகாதேவன் தம்பி உங்களுக்கு போனோகிராம் தந்தி டெல்லியிலிருந்து வந்திருக்கிறது
என்றார் ராசுக் குட்டி அண்ணன்.
காரணம் புரியாமல் தலை சுற்றியது .
தம்பி உங்களுக்கு தேசிய விருது கெடச்சிருக்காம் சனவரி 12ல பிரதமர் கையாலே
வாங்கப் போகணுமாம் என்றார் .
எதுவும் பேசத்தெரியவில்லை .
அம்மாவிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு அடுத்த தந்தி தர நகர்ந்தார்
தந்தி என்பது வெறும் தந்தியல்ல
உருக்கி வைத்த உணர்வின் நெகிழ்வுத் தாள் .
ஆண்டாளம்மா கதைபோல் மகாதேவன் கதைபோல் ஆயிரமாயிரம் கதைகளுண்டு அந்த ஒற்றைத் தந்தித் தாளுக்குள் .
……………………………………………………………………………………………………………………………………….. .
இன்றுடன் தந்தி சேவை நிறைவு!

கடந்த 160 ஆண்டுகளாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த தந்தி சேவை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் சேவை, இரவு 9 மணியுடன் முடிவுக்கு வருகிறது. திங்கள்கிழமையிலிருந்து இச்சேவை இருக்காது. கடைசி நாளான இன்று தந்தி கொடுக்க வருபவர்களை வீடியோ மூல்ம் படம் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Vikatan
…………………………………………………………………………………………………………………………………………………………
சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி 

ஞாயிறு, 7 ஜூலை, 2013

தாமிரபரணி நாகரீகம் முனைவர் ச .மகாதேவன்



ஆற்றுச்சமவெளிகளில்தான் நாகரிகங்கள் தோன்றின .தண் பொருநை நதியாய் பொதிகை மலையில் உருப் பெற்று ,நெல்வேலி முழுக்க ஓடி வற்றா வளம் சேர்க்கும் தாமிர பரணி நதியோரம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான தண் பொருநை நாகரிகம் தோன்றியது .வான் முட்டும் பொதிகை மலை,அதில் முகில் எட்டும் பாண தீர்த்தப் பே ருவி ,அணையை நிறைத்து ,பாபநாச மலையில் இருந்து கம்பீரமாய் இறங்குகிறாள் தாமிரபரணி எனும் தண்ணீர்த் தாய் .அம்பாசமுத்திரம் ,கல்லிடைக் குறிச்சி ,வழியே கம்பீரமாய் நடந்து வருகிறாள் தண் பொருநைத் தாய் .
குந்தியின் மகனே! மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்'என்று ஒரு முனிவர் தர்ம புத்திரனைப் பார்த்துத்  தாமிரபரணியின் பெருமையைச் சொல்கிறார் .கங்கைப் போல் புனித நதியாகத் தாமிரபரணி போற்றப் படுகிறது .
இறையனார் சிவபெருமானின் திருமணத்திற்காகத்  தென்புலம் தாழ்ந்து வடபுலம் உயர்ந்தபோது சமன் செய்ய அகத்திய மாமுனிவர் வந்த பாபநாசத்தலத்தில்தான்   தாமிரபரணி நதிக் கரையில் ஈசன் அவருக்கு தன் திருமணக் கோலத்தைக் காட்டியதாகப்   புராணச் செய்தி உள்ளது .
காளிதசருடைய ரகு வம்சம் எனும் காவியத்திலும் தாமிரபரணிகுறித்த பதிவு உள்ளது .
வட மொழியில் அமைந்த வான் மீகி இராமாயணத்தில் தாமிரபரணி நதி குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன .
பொதிகை மலையில் உருப் பெற்று வங்காள விரிகுடாக் கடலில் புன்னைக் காயல் எனும் இடத்தில் கடலோடு சங்கமமாகும் தாமிரபரணி நதியில் குற்றாலத்தில் உருப் பெற்று அருவியாய்  கொட்டித் தாமிர பரணியோடு இணையும் சிற்றாறும் கால்டுவெல் பாதிரியாரால் புகழப்பட்ட நதி  .இவ்விரண்டு நதியோடு வான் உலகிலிருந்து பாயும் சரஸ்வதி எனும் நதியும்  தாமிரபரணி நதிஉடன் கலக்கும் இடம் சீவலப்பேரி .திரிவேணி சங்கமமாய்  போற்றப்படும் சீவலப்பேரியை மையமாய் கொண்டு என்னயினாப் புலவர் எழுதிய முக்கூடற்  பள்ளு எனும் இலக்கியம் புகழ் பெற்றது .
முதல் ராஜராஜனுடைய 28 ஆம் கல்வெட்டுகள் 1013 வருடம் வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுக்கள் காணுமிடமான சீவலப்பேரியை அடுத்த சிற்றாறு (சித்திரா நதி) கலக்கும் பகுதியில் தாமிரபரணி நதியை தன் பொருந்தம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ராஜ ராஜ சோழனின் மிக நீண்ட கல்வெட்டு தாமிர பரணிக் கரையில் உள்ள திருப் புடை மருதூர் ஆலயத்தில் உள்ளது 
கல்லிடைகுறிச்சிக்கு  மேற்கே கன்னடியன் அணைக்கு உள்ளே மணிமுத்தாறு நதி தாமிர பரணியோடு  கலக்கிறது. ராம நதியும், கடனா நதியுடன் சேர்ந்து அது கடனா நதியாக திருப்புடைமருதூரில்  கலக்கிறது. எதிரே ஒரு காலத்தில் வராக நதி வந்து சேர்ந்தது. . முற்காலத்தில் இந்த இரு நதிகளும் தாமிரபரணியில் சேர்ந்த காரணத்தால் இவ்விடம் முக்கூடல் எனப்படுகிறது.
சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் முற்பட்ட நாகரீகம் தாமிரபரணி ஆற்றுச் சமவெளி என்பதற்கான தரவுகள் தாமிரபரணிக் கரையோரக் கிராமமான ஆதிச்ச நல்லூரில் கிடைத்தன
திருநெல்வேலியிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடம்தான் ஆதிச்ச நல்லூர் .
114 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இடுகாடு .
தோண்டத் தோண்ட தமிழ் இனத்தின் தொன்மையும் புதைந்து கிடந்த உண்மையும் வெளியே வந்தன .
நான்கு அடிக்கு ஒருவர் வீதமாக இறந்த முதுமக்கள், ஈமத் தாழிகளில் அடக்கம் செய்யப்பட்டனர் .
 பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் மண்ணிலே தன் ஆய்வினைத் தொடங்கினார் .
அப்போது மண்வெட்டி, கொழு முத லியன கிடைத்தன
அருமையான தொல் பொருட்கள் வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டன .
“1905-ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறுத் துணை கண்காணிப்பாளர் அலெச்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித் துக் கொடுத்ததோடு அகழ்ந் தெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் - ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டு மல்ல, நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறிய முடிகிறது.” என்று ஆய்வாளர் சுகுமாரன் குறிப்பிடுகிறார் .
நூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பல பதிவுகளைத் தந்தது .
அங்கே கிடைத்த தாழிகளில்  இருந்த மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீபகாலமாகக் கண்டறிந்துள்ளார்கள்.
நவதிருப்பதிகளையும் நவ கைலாயங்களையும் பெற்ற தாமிரபரணி நதிக்கரை தொன்மையின் தொட்டிலாகவும் திகழ்கிறது .
தாமிரபரணி எனும் தொன்மைத்  தொட்டில் 

முனைவர் .மகாதேவன்
 ,தமிழ்த் துறைத் தலைவர் ,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி 9952140275