ஞாயிறு, 7 ஜூலை, 2013

தாமிரபரணி நாகரீகம் முனைவர் ச .மகாதேவன்



ஆற்றுச்சமவெளிகளில்தான் நாகரிகங்கள் தோன்றின .தண் பொருநை நதியாய் பொதிகை மலையில் உருப் பெற்று ,நெல்வேலி முழுக்க ஓடி வற்றா வளம் சேர்க்கும் தாமிர பரணி நதியோரம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான தண் பொருநை நாகரிகம் தோன்றியது .வான் முட்டும் பொதிகை மலை,அதில் முகில் எட்டும் பாண தீர்த்தப் பே ருவி ,அணையை நிறைத்து ,பாபநாச மலையில் இருந்து கம்பீரமாய் இறங்குகிறாள் தாமிரபரணி எனும் தண்ணீர்த் தாய் .அம்பாசமுத்திரம் ,கல்லிடைக் குறிச்சி ,வழியே கம்பீரமாய் நடந்து வருகிறாள் தண் பொருநைத் தாய் .
குந்தியின் மகனே! மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்'என்று ஒரு முனிவர் தர்ம புத்திரனைப் பார்த்துத்  தாமிரபரணியின் பெருமையைச் சொல்கிறார் .கங்கைப் போல் புனித நதியாகத் தாமிரபரணி போற்றப் படுகிறது .
இறையனார் சிவபெருமானின் திருமணத்திற்காகத்  தென்புலம் தாழ்ந்து வடபுலம் உயர்ந்தபோது சமன் செய்ய அகத்திய மாமுனிவர் வந்த பாபநாசத்தலத்தில்தான்   தாமிரபரணி நதிக் கரையில் ஈசன் அவருக்கு தன் திருமணக் கோலத்தைக் காட்டியதாகப்   புராணச் செய்தி உள்ளது .
காளிதசருடைய ரகு வம்சம் எனும் காவியத்திலும் தாமிரபரணிகுறித்த பதிவு உள்ளது .
வட மொழியில் அமைந்த வான் மீகி இராமாயணத்தில் தாமிரபரணி நதி குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன .
பொதிகை மலையில் உருப் பெற்று வங்காள விரிகுடாக் கடலில் புன்னைக் காயல் எனும் இடத்தில் கடலோடு சங்கமமாகும் தாமிரபரணி நதியில் குற்றாலத்தில் உருப் பெற்று அருவியாய்  கொட்டித் தாமிர பரணியோடு இணையும் சிற்றாறும் கால்டுவெல் பாதிரியாரால் புகழப்பட்ட நதி  .இவ்விரண்டு நதியோடு வான் உலகிலிருந்து பாயும் சரஸ்வதி எனும் நதியும்  தாமிரபரணி நதிஉடன் கலக்கும் இடம் சீவலப்பேரி .திரிவேணி சங்கமமாய்  போற்றப்படும் சீவலப்பேரியை மையமாய் கொண்டு என்னயினாப் புலவர் எழுதிய முக்கூடற்  பள்ளு எனும் இலக்கியம் புகழ் பெற்றது .
முதல் ராஜராஜனுடைய 28 ஆம் கல்வெட்டுகள் 1013 வருடம் வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுக்கள் காணுமிடமான சீவலப்பேரியை அடுத்த சிற்றாறு (சித்திரா நதி) கலக்கும் பகுதியில் தாமிரபரணி நதியை தன் பொருந்தம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ராஜ ராஜ சோழனின் மிக நீண்ட கல்வெட்டு தாமிர பரணிக் கரையில் உள்ள திருப் புடை மருதூர் ஆலயத்தில் உள்ளது 
கல்லிடைகுறிச்சிக்கு  மேற்கே கன்னடியன் அணைக்கு உள்ளே மணிமுத்தாறு நதி தாமிர பரணியோடு  கலக்கிறது. ராம நதியும், கடனா நதியுடன் சேர்ந்து அது கடனா நதியாக திருப்புடைமருதூரில்  கலக்கிறது. எதிரே ஒரு காலத்தில் வராக நதி வந்து சேர்ந்தது. . முற்காலத்தில் இந்த இரு நதிகளும் தாமிரபரணியில் சேர்ந்த காரணத்தால் இவ்விடம் முக்கூடல் எனப்படுகிறது.
சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் முற்பட்ட நாகரீகம் தாமிரபரணி ஆற்றுச் சமவெளி என்பதற்கான தரவுகள் தாமிரபரணிக் கரையோரக் கிராமமான ஆதிச்ச நல்லூரில் கிடைத்தன
திருநெல்வேலியிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடம்தான் ஆதிச்ச நல்லூர் .
114 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இடுகாடு .
தோண்டத் தோண்ட தமிழ் இனத்தின் தொன்மையும் புதைந்து கிடந்த உண்மையும் வெளியே வந்தன .
நான்கு அடிக்கு ஒருவர் வீதமாக இறந்த முதுமக்கள், ஈமத் தாழிகளில் அடக்கம் செய்யப்பட்டனர் .
 பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் மண்ணிலே தன் ஆய்வினைத் தொடங்கினார் .
அப்போது மண்வெட்டி, கொழு முத லியன கிடைத்தன
அருமையான தொல் பொருட்கள் வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டன .
“1905-ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறுத் துணை கண்காணிப்பாளர் அலெச்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித் துக் கொடுத்ததோடு அகழ்ந் தெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் - ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டு மல்ல, நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறிய முடிகிறது.” என்று ஆய்வாளர் சுகுமாரன் குறிப்பிடுகிறார் .
நூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பல பதிவுகளைத் தந்தது .
அங்கே கிடைத்த தாழிகளில்  இருந்த மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீபகாலமாகக் கண்டறிந்துள்ளார்கள்.
நவதிருப்பதிகளையும் நவ கைலாயங்களையும் பெற்ற தாமிரபரணி நதிக்கரை தொன்மையின் தொட்டிலாகவும் திகழ்கிறது .
தாமிரபரணி எனும் தொன்மைத்  தொட்டில் 

முனைவர் .மகாதேவன்
 ,தமிழ்த் துறைத் தலைவர் ,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி 9952140275








1 கருத்து: