ஞாயிறு, 28 ஜூலை, 2013

திருநெல்வேலி வை.ஆறுமுகம் அவர்கள்




காதறுந்த ஊசி கூடக் கால் முள்ளகற்ற உதவும். எதுவும் வீணில்லை இந்த வாழ்க்கையில்.நகர்ந்து போகிற இந்த மனிதப் பிரவாகத்தில் நாம் நீண்ட தொடர்ச்சியின் கனிவான கண்ணிகள்.ரேசன் கடையில் மண்ணெண்ணை டின்னை நகர்த்துகிற மாதிரி காலம் நம்மை நகர்த்தி நகர்த்தி முன்னெடுக்கிறது.இனம் தெரியாத மனிதர்களோடு சங்கமிக்க வைக்கிறது.மானிட சமுத்திரம் நானெனக் கூவக் கற்றுக் கொடுக்கிறது.உரிமம் பெற்று வருகிற உறவுகளை விட உயிர்மம் பெற்று வரும் உறவுகள் உன்னதமனவையாய் அமையும் ரகசியம் அதுதான்.அயல்நாடுகளுடன் நட்புறவு ஒப்பந்தம் போட அரசுப் பணத்தில் பறக்கிற அதிகாரிகளை விட சாலை நடுவில் ரத்தச் சகதியாய் செத்துக் கிடக்கும் நாயை அகற்றுபவன் அருமையானவன்.மாதம்தோறும் குயில் நண்பர்களோடு ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்லும்போது கண்ட அந்த மனிதர்கள் உன்னதமானவர்கள்.மனவளர்ச்சி குன்றிய நூறு குழந்தைகளைப் பராமரித்து வரும் பெரிய கண்ணாடிபோட்ட அந்த மாமனிதர்,மொழியறியா மனவளர்ச்சிக்குன்றிய இளம்பெண்ணோடு அன்புபாராட்டும் அருட்சகோதரிகள்,மகன்களால்,மருமகள்களால் வீட்டை விட்டு அப்புறப்படுத்தப்பட்ட வயதான பாட்டிதாத்தாக்களை பராமரிக்கும் அந்த கல்லிடைக்குறிச்சி மாமனிதர் இப்படி எத்தனையோ முகம்தெரியாத உன்னத மாந்தர்கள் இந்த உலகிற்கு உயிர்மை தந்து கொண்டிருக்கிறார்கள்.தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளாக வெள்ளிக்கிழமை தோறும் திருநெல்வேலி பேராட்சியம்மன் கோவில் அருகே உள்ள வறியவர்களுக்கு உணவளித்துவரும் தொன்நூற்றைந்தைந்து வயதுப் பெரியவர் வை.ஆறுமுகம் அவர்கள் என்னை வியக்க வைத்த மாமனிதர்.காலையில் நான்கு மணிக்கு எழுந்து யோகா செய்து நூறு தோப்புக்கரணம் போட்டு உடற்பயிற்சி செய்து கடுக்காய் தண்ணீர் ஒரு செம்பு அருந்தி,ஆறு மணிக்கு அப்பர் தேவாரத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினால் நேரம் தெரியாமல் பக்கம் பக்கமாய் எழுதத் தொடங்குகிறார்.உலகம் சுற்றிய தமிழ் அறிஞர்.திருஞானசம்பந்தர் தேவாரத்தை மொழிபெயர்த்து இரண்டாயிரம் பக்க நூலகத் தந்துள்ளார்.ஜி.யூ.போப் மொழிபெயர்த்த திருவாசகத்தை ஆயிரம் பக்க அளவில் மொழிபெயர்த்து அதை நூலாக்கி .ஜி.யூ.போப் கல்லறையில் கண்ணீர் சிந்தி வெளியீட்டு இங்கிலாந்தில் திருவாசகம் குறித்து ஆய்வுரைகள் வழங்கினார்.அமெரிக்காவில் அறிஞராய் போற்றப்பட்டு பெரும் புகழ் பெற்றவர்.தள்ளாத வயதிலும் தமிழ்த்தொண்டு புரிந்து வரும் அய்யா பெரியவர் வை.ஆறுமுகம் அவர்கள் தற்போது அப்பர் தேவாரத்தை மொழிபெயர்த்து வருகிறார்.வறுமை நிலையில் உள்ள ஒரு பெண்குழந்தையை வளர்த்துப் படிக்க வைத்து கல்லூரி ஆசிரியராக உயர்த்தியவர் ஆறுமுகம் அய்யா அவர்கள்.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்கள்நம்முடன் இன்றும் இந்த ஊடக வெளிச்சமும் இன்றி வாழத்தான் செய்கிறார்கள்
செய்தித்தாளில் படம் வராத சேவையாளர்கள் சத்தமில்லாமல் மானுடத் தொண்டு புரியத்தான் செய்கிறார்கள்.


சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக