மாணவர்களிடம் பேசுவது என்றாலே என்றும்
இனிக்கத்தான் செய்கிறது.
குறும்போடும் சுறுசுறுப்போடும் கொங்குதேர் வாழ்க்கை
நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பு மாணவர்களே என்றும் என் சொத்து.
தமிழாய்ந்த
அறிஞர்கள் சபையில் பேசுவதைவிட மாணவர்களிடம் பேசுவது மிகவும் பிடித்தமானது.
வழிதவறிப்போன
வழிப்போக்கன் மாதிரி மொழிதவறித் தவிக்கிறோம்.
மொழியின் உன்னதத்தை மாணவர்களிடம்
உரக்கச்சொல்லிக்கொண்டேயிருக்கிறேன்.
அவர்கள்தான் எதிர்கால நம்பிக்கைகள்.ஊர்ந்து
செல்லும் உருத்திரப்பாம்புகளாய் நம்மோடு சேர்ந்து பயணிக்கின்றன சில கனமான கணங்களும்.
உயரம்
விட்டிறங்கும்போது துயரப்படும் வயிறு மாதிரி சுழற்றிஎறியும் வாழ்வின் கனங்களில்
துயரப்படுகிறோம் சகமனிதர்களின் பாடுகளுக்காக.
தெரியாத பலவற்றைத் தெரிந்ததாய் காட்டி
தெளிவில்லாமல் கலங்கலாய் நகரும் இப்புதிர் வாழ்வை நான் புரிந்துகொண்ட விதத்தைத்
தினந்தோறும் என் மாணவக்கண்மணிகளுக்குச் சொல்லிக்கொண்டேயிருக்கிறேன்.
நான் பயின்ற
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த்துறையிலிருந்து அன்பு
அழைப்பு.தமிழுக்குத் தொண்டாற்றிய தண்டமிழ்த்தென்றல் ராபர்ட் டி நொபிலி அவர்களின்
பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளையில் சொற்பொழிவாற்ற வேண்டும் என்ற அன்பு அழைப்பு
இளங்கலைத் தமிழ்த்துறையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
அ.ஜான்பால்அவர்களிடமிருந்து அன்பு அழைப்பு..மறுக்கஇயலுமா?
உடன் ‘கவிதையெனும்
பெருமொழி’ எனும் தலைப்புத்தந்தேன்.மேடைக்கு வந்தவுடன் நகுலனின் முள் போன்ற
இளம்வெண்தாடிமுகம் நினைவுக்கு வரவே
‘’இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்’’
கவிதையோடு தொடங்கினேன்.அப்படியொரு அமைதி அந்த
இளங்கலை மாணவமாணவியரிடம்.
பாரதியின் ‘’அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’’கவிதை
மாணவர்களுக்கு என்றும் பிடித்ததாய் இருந்தது.
நிழற்படப்பதிவுக்கருவியாய் தாம் கண்ட
காட்சியைக் கவிதையாக்கும் கல்யாண்ஜியின் ‘’கக்கத்துக் குடையைப்போல் பெரிதாகக்
கிழிந்துபோச்சோ அவன் வாழ்க்கை’’ என முடியும் கவிதை சொன்னேன்.
ந.பிச்சமூர்த்தியின்
‘கொக்கு’ கவிதை,தருமு சிவராமின் படிமக்கவிதையான
‘’சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது’’
எனும் கவிதை சொன்னபோது மாணவர்களுக்குப்
புரியச்சற்று நேரமானது.
கு.ப.ரா.,சி.மணி,வைதீஸ்வரன்,பசுவய்யா,மீரா,விக்கிரமாதித்தன்,மேத்தா,கவிக்கோ,சிற்பி
என்று சொல்லிக்கொண்டு வந்தேன்.கலாப்ரியாவின் ‘வனம்புகுதல்’ கவிதையோடு நிறைவு
செய்தேன்.
கடலை எப்படி கைக்குள் அடக்குவது?மாணவர்களுக்குச் சில நல்ல கவிதைகளை
அறிமுகபடுத்திய மனநிறைவோடு கிளம்பினேன்.
.தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு
இணைமுதல்வர் பேராசிரியர் தாமஸ்புனிதன்,தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் அ.மணி
ஆகியோர் பரிசுகள் வழங்கினர்..
கற்றுத்தந்த அந்த ஆலயம் பெற்றுத் தந்ததுதானே
இந்தப்பெயரும் இன்பத் தமிழும்