ஞாயிறு, 22 டிசம்பர், 2013

புத்தகக்கண்காட்சி




நாம் இப்போது உயிரோடு இருக்கிறோமா?எனக்கு அடிக்கடி வரும் சந்தேகம்.

புத்தகக்கண்காட்சி சீசன் களை கட்டிகொண்டிருக்கிறது.கண்காட்சி என்கிற சொல் சரிதானா? என்று பலமுறை சிந்தித்திருக்கிறேன்.அரங்குகளில் சுற்றித்திரிந்துவிட்டு பாப்கான்,பீசா தின்றுவிட்டு ஒருபுத்தகம் கூட வாங்காமல் நடையைக் கட்டுபவர்களுக்கு அந்தச் சொல் பொருந்தலாம்.

நெல்லை புத்தகக் கண்காட்சியில் புத்தகஅரங்குகளைவிட மதுரம் உணவகம் பக்கம் கூட்டம் அதிகமாய் இருந்தது.

வாசித்தலை நேசித்தலாக்காத வரை கோடிக்கணக்கில் பணம் செலவழித்துத் திருவிழா நடத்தி எந்தப் புண்ணியமும் இல்லை.அறுபது லட்சம் செலவழித்து வீடுகட்டுகிறோம் அறுபதாயிரம் ரூபாய் செலவில் அகன்ற திரைத் தொலைக்காட்சித் திரைகளுக்கு அறை ஒதுக்குகிற நமக்குப் புத்தகங்கள் வைத்துப் பாதுகாக்க,படிக்க ஒரு சிறுஅலமாரியைக் கூட வாங்கிவைக்க முடியவில்லை.


நல்ல நூல்கள் நம்மோடிருப்பது நல்ல மனிதர்கள் உடன் இருப்பதைப் போல் என்று எப்போது உணரப்போகிறோம்.நூல்கள் வாங்கிப் புரட்டிப் படித்த காலம் மாறி காகிதங்கள் இல்லா மின்நூல்கள் ஆயிரமாயிரம் இணையத்தில் கிடைக்கிறது.

படைப்பாளிகளின் அனுமதியில்லாமலே அவர்களின் படைப்புகளை ஒருகுறியில் தட்டச்சு செய்து இன்று பலர் பதிவேற்றி வைத்திருக்கும் நிலை.வெளிநாடுகளுக்கு இணையான அருமையான அட்டைப் படங்களுடன் தரமான காகிதங்களுடன் லட்சக்கணக்கில் நூல்கள் வந்துகொண்டேயிருந்தாலும் காலம் கடந்து நிற்கும் நூல்கள் ஒருசில மட்டுமே.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்ற விளம்பரக்குரல்கள் இப்போது புத்தகங்களுக்கும் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.

இப்போதிருக்கும் ஒரே கவலை திரைப்படங்களுக்குள்ளும் தொலைக்காட்சித் தொடர்களுக்குள்ளும் தொலைந்துபோன நம் குழந்தைகளைப் படிக்கத் தூண்டும் சிறுபுத்தகங்களைப் படிக்க வைக்கும் நூலகநேரம் உடனே ஒதுக்கப்படவேண்டும்.

என் தந்தையார் திரு.ம.சௌந்தரராஜன் பாளை.தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் நான் பயின்றபோது எனக்குக் கிடைத்த அருமையான தமிழாசிரியர்.ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமையன்று நூலக வகுப்பு என அறிவித்து மாணவர்தலைவரை நூலகத்திற்கு அனுப்பி நாற்பது நூல்களை எடுத்துவரச் செய்து நாற்பது மணித்துளிகளுக்குள் ஏதோ ஒருநூலை அதன் சிறுபகுதிகளைப் படிக்க வைத்து அதன் சுருக்கத்தை மறுநாள் எழுதிவரச்சொல்வார்.

இளையசமுதாயத்தை வாசிக்க வைக்காமல் நாம் நடத்தும் புத்தகத்திருவிழாக்கள் இலக்கியவிழாக்களாய் அமையலாமே தவிர பயன்முகுந்ததாய் அமையாது.

‘’கற்கும்போதேனும் உயிரோடு இரு’’ என்று இளையராஜா ஒரு நூலில் எழுதியிருப்பார்.நாம் இப்போது உயிரோடு இருக்கிறோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக