நினைவுகளின் பரணில் நித்தமும் பல பழையபதிவுகள்
படமெடுத்து ஆடிக்கொண்டே இருக்கின்றன.
பொருட்களாய்,இடங்களாய்,முகங்களாய் காலம்
எழுதிக்கொண்டே செல்கிறது.
அதனால் பழைய பொருட்களின் மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு
உண்டு.
இறந்தகாலத்தின் இருளும் பழமையும் அதன்மீது போர்வை போர்த்தியதாக
நினைப்பதுண்டு.
பழைய ஆர்லிக்ஸ் கலர் விளம்பரப்பலகையின் நிறத்திலிருந்து ஒரு கல்லூரின் பெயர்ப்பலகை நிறம்மாற்றப்பட்டபோது அப்போதைய முதல்வருக்கு’’
ஏன் மாற்றினீர்கள்..வேறு நிறத்தில் பார்க்கப் பிடிக்கவில்லை” என்று பக்கத்தில்
வசிக்கும் ஒருவரிடமிருந்து கடிதம் வந்ததைப் பார்த்திருக்கிறேன்.
சவேரியார்
கல்லூரியில் படிக்கும்போது எத்தனையோ தேநீர்க்கடைகள் இருந்தாலும் மனகாவலம்பிள்ளைப்
பூங்காவுக்கு அருகிலுள்ள மரியா கேண்டீன்தான் போவோம்.
கோட்டைப் பிள்ளையார்கோவில்
கோட்டை,லூர்துநாதன் சிலை நிற்கும் தெற்குக்கடை வீதி,அமைதியாய் புத்தகம் வாசிக்கும்
அறிஞர் அண்ணாசிலை,டவுன் ஆர்ச்,கப்பல் போன்றிருக்கும் சென்ட்ரல் தியேட்டர்,கடல்போல்
விரிந்திருக்கும் நயினார் குளம்,ஊசிக்கோபுரம் கடிகாரம்,ஆயிரம் முறை
தோண்டியபின்னும் ஈடுகொடுத்து நிற்கும் சுலோச்சன முதலியார் தாமிரபரணி
ஆற்றுப்பாலம்,குறுக்குதுறைக் கல்மண்டபம்,ஆவிபறக்கும் இட்டிலியோடு தேக்குமேசையில் உணவு
பரிமாறும் டவுன் விஞ்சை விலாஸ் உணவகம் என பார்க்கும் யாவுமே அழகியல்
சித்திரம்தான்.
பளபளப்பான கடிகாரத்திற்கு அப்பா,வட்டக் கண்ணாடியோடு செய்துவைத்த
கடிகாரப்பெட்டி இன்னும் அழகாகத்தான் உள்ளது.
கும்பகோணத்தில் நடைபெற்ற இஸ்லாமியத்
தமிழ்இலக்கிய பன்னாட்டுக் கருத்தரங்க அரங்கில் கன்னியாகுமரியைச் சார்ந்த இஸ்லாமிய
நண்பர் அரியபொருட்களின் தொகுப்பைக் காட்சியாக வைத்திருந்தார்.
பழைய காசுகளை
மொத்தமாய் எண்ணும் பலகை,மிகப் பழையதொலைபேசி,சிமினி
விளக்கு,கெண்டி,பேனா,அஞ்சறைப்பெட்டி,பல்லாங்குழி,காசுகள் என பார்க்கப் பார்க்க
நெஞ்சை நிறைத்தன.
காலத்தின் நிறம் கலங்கலான செம்பழுப்போ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக