வியாழன், 14 பிப்ரவரி, 2013

காசுகளும் காயங்களும்


யாம நிலா


ஈராயிரமாண்டுப் பழமையான
கோவிலை மேலும் செறிவாக்க
அங்குமிங்கும் பறக்கிற வவ்வால்களைப் போலப்
பயணச் சிற்றுண்டிகள்
நம் பயணங்களைச் செறிவாக்குகின்றன.

திருநெல்வேலி அல்வாக்களும்
சாத்தூர் வெள்ளரிப் பிஞ்சுகளும்
கோவில்பட்டி கடலைமிட்டாய்களும்
கடம்பூர் போளிகளும்
திண்டுக்கல் கொடை ஆரஞ்சுகளும்
மணப்பாறை முறுக்குகளும்
நம் இரயில் பயணங்களை
இரசித்தலுக்குள்ளாக்கின.

அன்பின் கண்களில் பார்க்கும்போது
யாமம் கூடப் பேரழகுதான்.
யாம நிலாவும் ஓரழகுதான்.

ரசித்தலும் வயிறுநிறையப் புசித்தலும்
கவலையற்று வசித்தலும்தானே வாழ்க்கை!

நகரும் அதிசயம்

ஆனித்தேர் பார்க்க வேண்டுமென்றால்
தட்டாக்குடித்தெரு சரசுப்பெரியம்மையோடுதான்
போக வேண்டும்…
கைகளைப் பிடித்தபடி
அவளிடம் கதை கேட்ட தேர் நாட்கள் தேனானவை.

முழுத்தேரைச் செய்யத்
தச்சர்கள் முயன்றபோது
ஆகாயத்தில் பறந்ததால் இப்போதுள்ள
தேரெல்லாம் முக்காலரைக்கால் அளவு தண்டாதென்பாள்

புதுத்தேர் செய்தபின்
தத்தம் உளியால் சுண்டுவிரலை அறுத்துக்
குருதிவடித்துத் தச்சர்கள் தச்சுக்கழிப்பரென்பாள்.

சுதந்திரம் பெற்ற ஆண்டின் ஆனித்தேர் விழாவில்
நெல்லையப்பர் தேர் உச்சியில்
தேசியக்கொடி பறந்ததென்பாள்

எழுபத்தேழில் தேர்கிளம்பும் முன்
கிடாவெட்டித் தேரடிமாடனுக்குப் பலி தராததால்

லாலா சத்திர முக்கில் தடிபோட்ட
நாலுபேரைத் தேர் நசுக்கிக்கொன்றதென்பாள்.

குழந்தை பிறந்தவுடன்
தேரடி மாடனுக்குப் பொங்கல் வைக்க வில்லையென்றால்
அர்த்தஜாமத்தில் அலறி அழுமென்பாள்.

எந்தக் கடை முன் தேர்நிற்கிறதோ
அவர்கள் பொங்கல் வைத்தபின்தான்
அடுத்தஅடி நகருமென்பாள்
மறுநாள் தேர்வடம் பார்க்கக்
கங்காளநாதர் வருவாரென்பாள்

உள்ளிருந்த உற்சவரைப் பற்றி
அவள் சொன்னதை விடத்
தேர் பற்றிச் சொன்னவை அதிகம்.
அந்த ஆனித்தேரைப் போல
சரசுப் பெரியம்மையும் நகரும் அதிசயம்
உயிருள்ள உலவும் தொன்மம்.





நகரப் பேருந்தில் நெல்லையப்பர் கோவிலுக்குப்
பயணிக்கும்போது பார்த்த
சாலையோரத்துத் தெரஸா ஓவியம்!
முகச் சுருக்கங்களோடு கருணை பொங்கிய
அன்னையின் ரங்கோலி உருவத்தின் மேல்
காசுகள் ஏற்படுத்திய காயங்கள்..
பார்க்கப் பரிதாபமானது.

பின்னணியை விட்டுயர்ந்து
முப்பரிமாண பிம்பமாய்
பேசுகிறது அச்சாலையோரத்து ஓவியம்

தூரிகைளால் வரையப் படாத
அவ்வுயிர் ஓவியத்தைச் சுற்றிக்
கூட்டம் கூட்டமாய் அப்பாவி ஜனங்கள்

கடந்த வாரம் லூர்துநாதன் சிலைக்கருகே
சிலுவையில் ஏசுநாதர் ரத்தம் சிந்திய
ஓவியத்தை உள்ளுக்குள் ரத்தம் சிந்த அவன்
வரைந்து முடித்து விட்டுக்
கல்மீது குத்தவைத்துக் காத்திருந்தான்.

வீசியெறியப்பட்ட காசுகள் ஏற்படுத்திய
காயங்கள் வலிமையாயிருந்த காரணத்தால்
அவன்
அதன்பிறகு எந்த ஓவியத்தையும்
வரையவே இல்லை.

இப்போது
சுலோசன முதலியார் பாலநடைபாதையில்
சுருண்டு கிடக்கிறான்
முடிந்தால் யாராகிலும்
அக் காட்சியை வரையலாம்.
அதையும் காசுகள் காயப்படுத்தலாம்.



மண்பெட்டி அடுப்புகளில்
சமையல் செய்வாள் சாரிப்பாட்டி

அடுப்பில் கம்பிக்கோலம் போட்டுப்
பக்கவாட்டிலெல்லாம் சாணியால் மொழுகி
அருள் அன்கோ விறகுச் சுள்ளிகளை
உள்ளே வைத்து ராம நாமத்தோடு
மண்ணெண்ணெய் ஊற்றி… அவள்
அடுப்பைக் கபகபவென எரியச்செய்வதே
அலாதியான காட்சி.
அன்னபூரணயின் பெயரைச் சொல்லி
அரிசியைக் களைந்து
கொதிக்கும் உலையிலிடுவாள்

விறகின் பின்புறம் தைலம் போல்
சிகப்பு நிறத் திரவம் கசிந்து
அடுப்பு சத்தமிட்டு எரியும்போது
பாட்டி சொல்வாள்…
விருந்தினர் யாரோ வரப்போகிறார்களென.

அடுப்பின் மொழியறிந்தவள் அவள்
வருவோர் உண்ணப்
பிடியரிசியை உலையில் போடுவாள் அதிகமாக

இன்று
சத்தமிடும் அடுப்புமில்லை
வருவோருக்கெல்லாம் அள்ளியள்ளி
அன்னமிடும் அவளுமில்லை
அமைதியாகிவிட்டன
அடுப்பும் அடுக்களையும்.




என் கடைசிக் கவிதையின்
முதல் சொல்லை நானின்னும் முடிவு செய்யவில்லை.

மானே.. தேனே என்றெல்லாம் எழுத முடியாது
பசியாயிருப்பவனுக்குப்
பால்கோவாப் பொட்டணத்தை விடப்
பழையசோறும் வெங்காயத்துண்டும் ஏகாந்தம்.

என்னிலிருந்து தொடங்கிய கவிதை
என்னில்தானே நிறைவடையும்?

பாணதீர்த்த அருவியில் மூழ்கிச்செத்தவனின்
உப்பிய பூத உடல்.

காதல் தோல்வி தாங்காமல்
டெமக்ரான் குடித்து
ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில்
விரைத்துக் கிடந்த பாமாக்கா மகன்

இவற்றில் எதைக் கொண்டு
என் இறுதிக் கவிதை
தொடங்குமென்று இப்போது சொல்ல முடியுமா?
கரைகளெங்கும்
சாம்பல் கரைக்கத் தோதாய்
சுடுகாடுகளைச் சுவீகரித்துக் கொண்டு
ஈமக்கிரியைகளுக்குத் தன்னையே
ஈகை கொடுத்தபடி
கால காலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது
தாமிரபரணி…
இப்படித் தொடங்குகிறேன்
என் இறுதிக் கவிதையை.

1 கருத்து: