வையகச் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்.,
பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627 011.
அறிவியல் வளர்ச்சியால் இவ்வயைம், மகத்தான வளர்ச்சியைப் பெற்றுவரும் இந்நாளில் அதற்குச் சற்றும் குறையாமல் சிக்கல்களும், குழப்பங்களும் தீவிரவாதத்தாலும் கடும்நோயின் தாக்குதல்களாலும், வறுமையாலும், பொருளாதாரச் சிக்கல்களாலும், சாதிசமய இன வேறுபாடுகளாலும், போர் வெறியாலும், உலக நாடுகள் தாக்குண்டுச் சீரழிவைச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன. கலாச்சாரச் சீர்கேடு, பொருளைத் தேடிப் பேராசையோடு இரவுபகலாகப் பணியாற்ற வேண்டிய நெருக்கடிகள் அவற்றால் ஏற்படும் மனச்சிதைவுகள் கூட்டுக் குடும்ப அமைப்புகள் உலகமயமாதலால் உடைந்து தனிக் குடும்ப அமைப்புகளானதன் விளைவாக ஏற்படும் மணமுறிவுகள், மது போதைப் பொருட்களை நாடிச் சென்று தற்காலிக மனநிம்மதி பெறப்போதைப் பொருட்களை நாடிச் சென்று தற்காலிக மனநிம்மதி பெற வேண்டியதால் பெற்ற நோய்கள், பொருளாதாரம் உள்ளோரே உயர்கல்வி பெற முடியும் என்ற நிலையில், கல்வி பெறமுடியாமல் போன நிகழ்வுகள், குடும்பச் சிதைவால் பெருகிவரும் பரத்தமைகள், ஒழுக்கச் சீர்கேட்டில் உதித்த எய்ட்ஸ் போன்ற நோய்கள், அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறளின் தேவையை, அதன் வழிகாட்டலைப் பெரிதும் நாடுகின்றன. ஜி.யூ.போப், கிண்டர்ஸ்லி, எல்லிஸ், ட்ரூ, கோவர், ராபின்சன், லாசரஸ், ஸ்காட், வீரமாமுனிவர் போன்றோரால் உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்ட உலகப் பொதுமறையாம் திருக்குறள், வையகக் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வுகளை உலகத்தாருக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.
எல்லாப் பொருளும் இதன்பால்உள, இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்
என்ற மதுரைத் தமிழ்நாகனாரின் வரிகளுக்கேற்ப (ச.வே. சுப்பிரமணியன், தமிழ் இலக்கிய வரலாறு, ப.86) எல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே பெற்ற நம் தன்னிகரற்ற வள்ளுவம், உலகின் சிக்கல்களுக்கான தீர்வுகளையும் உள்ளுக்குள் வைத்திருக்கிறது என்று இக்கட்டுரை விளக்குகிறது.
தீவிரவாதம் தீர வழி சொன்ன வள்ளுவம்
வஞ்ச மனம் கொண்ட ஒருசில மனிதர்களின் கடுஞ்சினத்தால் கொடூரமான இரு உலகப் போர்களை உலகம் எதிர்கொண்டது. உலகின் உயர்ந்த நிலையிலிருந்த தலைவர்களான மகாத்மா காந்திஜி, இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, கென்னடி, பூட்டோ போன்றோரைத் தின்று செரித்த தீவிரவாதம் இன்னும் தீர்ந்தபாடில்லை. வஞ்ச மனத்தோர் செய்யும் தீச் செயல்களைப் பார்த்து அவர்களுக்குள்ளிருக்கும் ஐம்புலன்களாக நிற்கும் அப்பூதங்களே சிரிக்கும் என்கிறார் வள்ளுவர்
வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
(குறள். 271)
“உலகின் அனைத்து நாடுகளும் இன்று சேர்த்து
வைத்திருக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டு
ஏழுமுறை இவ்வுலகை மீண்டும் மீண்டும்
அழிக்கலாம்“
(பகீரதன், உலக ஒற்றுமை, ப.7)
என்ற கருத்து நமக்கு அதிர்ச்சி தருவதாக அமைகிறது. கோடானு கோடி மக்கள் ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் இறந்து கொண்டிருக்க, உலக நாடுகள் இராணுவத்திற்காகச் செலவிடும் தொகையோ பல கோடிகள், நாடு வல்லரசாக வள்ளுவர் வழி சொல்லவில்லை,
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்லது நாடு (குறள். 271)
என்று பசியும் பகையுமற்ற நாட்டினை வள்ளுவர் காண விழைகிறார்.
“தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம்
தீயைக் கொண்டு மூடரெல்லாம் ஊரைக்கூட எரிக்கலாம்
கோபம் மட்டும் அடங்கிவிட்டால் கோபுரத்தில் ஏறலாம்
குணமிருந்து மனமிருந்தால் கடவுளாக மாறலாம்.“
(கண்ணதாசன், திசை இசைப் பாடல்கள், ப. 338)
என்ற கண்ணதாசனின் கருத்துக்கேற்பச் சேர்ந்தாரைச் கொல்லும் நெருப்பான சினத்தை விட்டொழித்தால் தீவிரவாதம், வன்முறை, சண்டைகள் இருக்காது.
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் கடும்
(குறள். 306)
வறுமை நோய் தீர வழி சொன்ன வள்ளுவம்
உலகம் தீர்க்க இயலாத கொடிய நோயாகத் திகழ்வது வறுமை உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க வசிப்பிடம் ஆகியன இல்லாமல் உலகில் தோன்றிய மனிதர்களில் 30% பேர் வாடி வதைப்பட்டு வருகின்றனர். சோமாலியா போன்ற நாடுகளில் உண்ண உணவின்றி இலட்சக்கணக்கான மக்கள் இறப்பினைத் தழுவினர். தாது வருடத்துப் பஞ்சம் இந்தியாவையே ஆட்டிப் பார்த்தது. பசிக் கொடுமையை நன்கறிந்த மதுரைக் கூலவாணிகன் சீத்தலை சாத்தனார், பசியை அகற்ற அமுதசுரபியேந்திய மணிமேகலையைக் காப்பியத் தலைவியாகப் படைத்தார். தீவதிலகையைக் கொண்டு மணிமேகலைக்குப் பசியின் கொடுமையை உணர்த்தினார்.
”ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
(மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை. ப.96)
என்று உணவு கொடுத்தோரை உயிர் கொடுத்தோராக உணர்த்தினார். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று “நல்வழி“யில் ஔவை உணர்த்துகிறார்.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் – பத்தும்
பசிவந் திடப்பறந்து போம் (நல்வழி 26)
பசியின் கொடுமையை அறிந்த அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார், வடலூரில் உணவிடு சத்திரத்தை அமைத்தார். “விருந்தோம்பல்“ எனும் அதிகாரத்தில் “விருந்தினருக்கு உணவிட்டவர் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து செல்வத்தைப் பெருக்கி வாழ்வாள்“ என்று திருவள்ளுவர் கருத்துரைக்கிறார்.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்
(குறள். 84)
வறுமையின் கொடுமையில் வாழ்வது. “நெருப்பினுள் துஞ்சுவதைப் போன்றது“ என்று ஒப்புமைப்படுத்துகிறார் வள்ளுவர்.
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது (குறள். 1049)
நெருப்பில்கூடத் தூங்கலாம். வறுமையிலிருப்போர் சிறிதும் கண்மூட இயலாது என்று கூறும் வள்ளுவர், வறுமை நோய்தீர ஈகையை மருந்தாகத் தருகிறார். எல்லாரும் எல்லாமும் பெறும்போது, அங்கு இல்லாமை என்பது இல்லாது போகும். ஏழைகளின் பசியைப் போக்கச் செல்வந்தர்கள், வாரி வழங்கிய செல்வம், பின் அவர்களுக்கே உதவும் என்று வறுமை தீர வள்ளுவர் வழி சொல்கிறார்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (குறள் . 226)
வறியவர்களுக்கு வாரி வழங்கும்போது வறுமை அழியும் என்பது வள்ளுவரின் தீர்வு.
ஊழலை ஒழிக்க வழிசொன்ன வள்ளுவம்
உலகின் பொருளாதாரத்தைக் கெடுக்கும் தீயசக்தியாக ஊழல் திகழ்கிறது. ஏழை மக்களின் வியர்வையில் விளைந்த பணம், கறுப்புப் பணமாகப் கிடக்கிறது.
“1948லிருந்து 2008 வரை முறையற்ற வகையில்
சேர்த்த செல்வம் ஏறத்தாழ ரூ.213 பில்லியன்
டாலர்கள் (ரூ.9.7 லட்சம் கோடி)“
என்று வாஷிங்டனிலிருந்து செயல்படும் பொருளாதார நடைமுறைகளுக்காகச் செயல்படும் அமைப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. ஊழலின் ஊற்றுக்கண், கண்காணிப்பு இல்லாத பெரு சுதந்திரநிலையே ஆகும்.
“வினையைச் செய்து கொண்டிருக்கிறானா என்றும்
செயல் ஒழுங்காக நடக்கிறதா என்றும் அரசன்
தினந்தோறும் பார்த்துக் கொள்ளவேண்டும்“
என்று வள்ளுவர் கருத்துரைக்கிறார். ஊழலை ஒழிக்க அதையே நாம் தீர்வாக எடுத்துக் கொள்ளலாம்.
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு (குறள் . 520)
“செங்கோன்மை“ எனும் அதிகாரத்தில் தன் கீழ்வாழ்வார் குற்றஞ்செய்தால் அக்குற்றத்தை நாடி, யாவர் மட்டுங் கண்ணோடாது, நடுவுநிலைமையைப் பொருந்தி அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை வழங்குவதே அரசின் கடமை என்கிறார் வள்ளுவர்.
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் வஃதே மறை (குறள். 541)
தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அதைச் சரிசமமாகப் பாவித்து நடுநிலையோடு அரசன் ஆராய்ந்தால், அதற்குரிய தண்டனையை வழங்கினால் ஊழல் ஒழியும்.
கல்வியறிவற்ற சிக்கலுக்கு வழி சொன்ன வள்ளுவம்
எழுத்தறிவின்மை உலகம் எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது. இந்தியா விடுதலை பெற்று 64 ஆண்டுகளைக் கடந்த பின்னும் அனைவருக்கும் கல்வி என்பது கானல்நீராகவே உள்ளது. இந்தியாவில் உயர்கல்வி பெறுவோரின் விழுக்காடு 12% மட்டுமே அனைவருக்கும் கல்வியைத் தருவதற்காக உலகின் அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. திருக்குறள் உட்பட அனைத்து நீதி இலக்கியங்களும் கல்வியின் பெருமையைப் போற்றியுள்ளன.
எம்மை உலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து (நாலடியார். 132)
என்று நாலடியார் வாழ்வின் மயக்கம் போக்கும் அருமருந்தாகக் கல்வியைக் காட்டுகிறது. “கல்வி“ எனும் அதிகாரத்தில் கல்வியைத் திருவள்ளுவர் வலியுறுத்திய அளவு வேறெந்த இலக்கியமும் வன்மையாக வலியுறுத்தவில்லை.
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் (குறள். 393)
என்று வள்ளுவர் கற்றோரையும் கல்லாதவரையும் வேறுபடுத்துகிறார்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து (குறள். 398)
இப்பிறவியில் நாம் கற்கும் கல்வி, ஏழு பிறவிகளுக்கும் நம்முடன் வந்து உதவும் என்கிறார்.
வள்ளுவர் விலக்க விரும்பிய மதுவும் விலை மாதுவும்
உலகை அச்சுறுத்தும் கொடிய எய்ட்ஸ்நோய் உயிர்க்கொல்லி நோயாகக் கோடிக்கணக்கான விலை மதிப்பில்லா மனிதர்களைப் பலி வாங்கிக் கொண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 1வது நாளை உலக எய்ட்ஸ் நோயாளிகள் தினமாக உலகம் அனுசரித்து வருகிறது. சங்ககாலம் பரத்தையர் பிரிவை ஒழுக்கமாகக் கருதி அனுமதித்தமைக்கு எதிராக வள்ளுவர் “வரைவின் மகளிர்“ அதிகாரத்தைப் படைத்துப் பரத்தமை ஒழுக்கத்தைச் சாடுகிறார்.
“பொருளை விரும்பும் விலைமகளின் தழுவல்
இருட்டறையில் பிணத்தைத் தழுவியது போன்றது“
என்று அதன் விளைவைப் புரிய வைக்கிறார்.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று
(குறள். 913)
எய்ட்ஸ் நோய்க்கு எதிராக இதைவிடச் சிறந்த விளம்பர வாசகத்தைத் தந்துவிட முடியாது.
உலகை இன்று ஆட்டிப்படைத்து வருவது “மது“ எனும் அரக்கன்.
“தமிழகத்தில் இப்போது தினசரி மது அருந்துவோரின்
எண்ணிக்கை 49 லட்சம் என்பதும், அவர்களின்
சராசரி வயது 28 லிருந்து 13ஆகக் குறைந்துள்ளது
என்பதும் அதிர்ச்சியளிக்கும் தகவல். மேலும்
தற்கொலைக்கு முயல்வோரில் 37 சதவீதத்தினர்
மதுப்பழக்கம் உள்ளவர்களே” (தினமணி நாளிதழ், 23.11.2010, ப.6)
எனும் ஆய்வாளர் முத்துக்குமாரின் கருத்து உண்மையை உணர்த்துகிறது. வரைவின் மகளிர் அதிகாரத்திற்கு அடுத்து “கள் உண்ணாமை“ அதிகாரத்தை வைத்து மது அருந்துவதற்கு எதிராக வள்ளுவர் கருத்துரைக்கிறார்.
“உறங்குபவர் இறந்தவரைப் போலாவார், மது, அருந்துபவர் நஞ்சுண்பவரைப் போலாவார்“ என்ற பொருளில்.
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர் (குறள். 926)
கொடிய நஞ்சாம் மதுவும் நோய்தரும் விலைமாதுவும் அடுத்தடுத்து வள்ளுவரால் விலக்கச் சொன்ன தீமைகள்.
முடிவுரை
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
(குறள். 34)
என்று சுருக்கமாகவும் சுருக்கென்று தைக்கும் வகையிலும் வாழ்வியல் நெறி சொன்ன இலக்கியம் திருக்குறள்.
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (குறள். 972)
என்று சாதிமதஇன மொழி பேதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அற்புத இலக்கியம் திருக்குறள்.
கொல்லாமை, கள் அருந்தாமை, பிறனில் விழையாமை, புலால் உண்ணாமை, புறங்கூறாமை, இன்னா செய்யாமை, பயனில் சொல்லாமை எனும் ஆமைகளை நம்முள் புகவிடாமல் அறக்கருத்துக்களைக் கூறியவர் திருவள்ளுவர். வையகத்தின் எல்லாச் சிக்கல்களுக்கும் வள்ளுவத்தில் தீர்வினை நம்மால் தேடியெடுத்துவிட முடியும். வள்ளுவம் தனிமனித ஒழுக்கத்தை உயர்வாகக் கருதியது, உலகப் பார்வையோடு எக்காலத்துக்கும் எல்லோர்க்கும் எப்போதும் பொருந்தும் உயரிய விழுமியங்களை உலகப் பொதுமறை திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக