தன் வரலாறு
ஆறு தன் வரலாறு கூறுவதாக
ஆறாம் வகுப்பில்
கட்டுரை எழுதியதோடு சரி
அதன் பிறகு
எந்த வரலாற்றையும்
நான் எழுதவில்லை.
அவரவர் வாழ்க்கையை
அவரவர் வார்த்தைகளில்
சொல்லுங்கள் என்பார்
நான் சொல்லத் தொடங்கியுள்ளேன்
இலக்கியமா?
இல்லையா?
என்ற தர்க்க
வினாக்கள் ஏதுமற்று.
அணிலாடு முன்றில்
மலையான் ஊரணிக்கருகேயிருக்கும்
நாகி ஆச்சி வீட்டு முற்றத்தில்
கொய்யா மரமுண்டு...
அதில் கொய்யா
கொய்யாக் கனியுண்டு
கல்முகப்பிலமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வழுவழுப்பான மரத்திலிருந்து
அங்குமிங்கும் பார்த்தபடி
பட்டுக் குஞ்சலத்தையொத்த அழகு வால்
முன்னிரு கரங்கள் ஏந்தி
முன்னிருக்கும்
பழத்தைக் கொறிக்கிறது
அவ்வப்போது
அங்குமிங்கும் மிரட்சிப் பார்வை வீசுகிறது
தடவிக் கொடுப்பதற்கு
இராமர்களுக்குப் பஞ்சமோ என்னவோ
நம் பக்கத்தில் வரவே பயப்படுகிறது
ஆச்சியின் அழைப்பிற்குத் திரும்பினேன்
பூனையின் வாயில்
அணில் மாட்டித் துடித்தது.
அதன்பின்பு
அணிலாடா அந்த
முன்றிலுக்குப் போக
மனமில்லை
தி.க.சி.
அஞ்சல் அடையாளம்...
கடிதங்களற்ற வாழ்க்கை
கழுத்தை இழந்த முண்டங்களாவே
அஞ்சலட்டைகளில் இலக்கியம் படைத்துவரும்
தி.க.சி. யைப் போல
அச்சடித்தது போல்
ஆயிரமாயிரம் கடிதங்கள் எழுதிய
வல்லி்க் கண்ணனைப் போலப்
புதுச்சேரியிலிருந்து கிண்டலாய் எழுதும்
கி.ரா. போல் கடித இலக்கியங்கள் படைக்க
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை...
கருமை மை பூசப்பட்ட
கருமாதிக் கடிதங்களின்
மரண அடர்த்தியை
எந்த மின்னஞ்சல் செய்து
தந்து விடும்?
“வாகா” எல்லையிலிருந்து
மிலிட்டரிக்கார மருதையா
தன் மனைவிக்கு ஆசையாய் ரகசியமாய்
எழுதிய இன்லண்ட் கடிதங்கள்
இன்னொரு இன்பத்துப் பாலாயிற்றே!
அடிப்பூர அழைப்பிதழோடு
அம்பாளின் குங்குமப் பிரசாதத்துடன்
திருவில்லிபுத்தூரிலிருந்து வந்த
ஐந்து ரூபாய் கவர் தந்த நிம்மதி கொஞ்சமா?
ஒரு மணியாகி விட்டால்
தபால்கார செல்வராஜ் அண்ணாச்சியைக்
கண்கள் தேடுகின்றன
கடிதம் ஏதும் எனக்கு வராததால்
தலைகவிழ்ந்தபடி
சைக்கிளை உருட்டிக் கொண்டு
அடுத்த வீட்டுக்கு
அவசரமாய் அவர் நகர்கிறார்.
பொன்னமராவதி
சுமை தாங்கி வரலாறுகள்
பொன்னமராவதி
பட்டமரத்தான் கோவிலுக்கருகேயிருக்கும்
அமரகண்டான் ஊருணிக்கரையில்
என் தாத்தா வைத்த
சுமைதாங்கிக் கல் இன்னுமிருக்கிறது
அந்தக் கல்லை நட்டபின்தான்
அம்மா பிறந்தாளாம்...
அப்போதிருந்து அந்தக் கல்லைப்
பார்க்கும் போதெல்லாம்
அம்மா குழந்தையாயிருப்பது போலக்
காட்சிகள் வரும்.
பத்து மாதக் கருவுடன்
பாப்புலர் திரையரங்கிற்குப் படம் பார்க்கப்போன
தென் பொத்தை வெள்ளையம்மா அக்கா
துள்ளத்துடிக்க இறந்து போனபோது
அவளதுமடிப் பாரம் இறக்க
ஊர் எல்லையில் மக்கள் வைத்த
சுமைதாங்கிக் கல் இன்னுமிருக்கிறது
இப்போது ஏதேனும் ஒரு
சுமைதாங்கிக் கல்லைப் பார்த்தால் கூடக்
கற்களுக்குப் பதில்
அம்மாக்களும்
வெள்ளையம்மாக்களும்
தெரிகிறார்கள்
அவை...
வாழ்ந்து முடிந்தவர்களின்
வரலாறுகள்.
பழங்களும் நாங்களும்...
விரைவாக அழுகிவிடக் கூடாதென
மெழுகிடப்பட்ட ஆஸ்திரேலிய
ஆப்பிள்களைப் போல
மனிதர்களின் தோல்களுக்கும்
நாளை மருந்திடப்படலாம்
பார்த்தவுடன் பரவசத்தை ஏற்படுத்தும்
ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட
வாஷிங்டன் ஆரஞ்சுகளைப்போல நாளை
மனிதர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு
நெற்றியில் இரகசியக் குறியீடுகளுடன்
அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டப்படலாம்.
விதையில்லாத் திராட்சைகளைப் போல
மனிதர்களை மாற்ற
விபரீத விஞ்ஞானம் முயலலாம்.
அழுகிய பழங்களை
அள்ளிப் போட்டு அரைத்துப்
பழக் கூழ் தயாரிக்கிறமாதிரி
மனிதர்களை அரைத்து
எலும்புக் கட்டடங்கள்
எழுப்பப்படலாம்.
என்ன செய்தாலென்ன?
எவர் எதிர்த்துக்
கேட்கப் போகிறார்கள்?
ஒரு ரூபாய் கோழிக்குஞ்சு
பாளையங்கோட்டை
சேவியர் பள்ளி வாசலில்
ஆறாப்பு முழு ஆண்டுத் தேர்வு
முடித்த மகிழ்ச்சியில் நின்றிருந்தபோது
அட்டை அரணில்
கீச்... கீச்... சத்தத்தோடு ஒன்றன்மீது ஒன்றாய்
அங்குமிங்கும் அலைந்த
கலர் கோழிக் குஞ்சுகள்
கண்ணை ஈர்த்தன.
பாக்கெட்டிலிருந்த ஒரு ரூபாய்க்குப்
பச்சை நிறக் கோழிக் குஞ்சு கிடைத்தது
வீட்டிற்குக் கொணர்ந்து
தலையில் வைத்து ஆடி மகிழ்ந்து
உண்ணக் குருணை தந்து
உறங்கிப் போனேன்
விடியும் போது
விரைந்து கிடந்தது
அந்த வண்ணக் கோழிக்குஞ்சு
உணர்ந்த முதல் நாளும் அதுவே.
காய்கறிச் சந்தைக்குப் போகும்வழியில்
கம்பிக் கூண்டுகளில் வைத்துக்
கோழிக் கடைகளில் இறக்கப்படும்
பிராய்லர் கோழிகளைப்
பார்க்கும் போதெல்லாம்
பரிதாபமாகச் செத்த அந்தப்
பச்சை நிறக் கோழிக் குஞ்சின்
விரைத்த உடலே
நினைவுக்கு வந்து நெஞ்சை அழுத்துகிறது
Wednesday, February 13, 2013
பழமொழி
எதுவும் தெரியாத
மக்கென்று பரிகசித்தாய்
கற்கத் துணிந்தேன்
மெத்தப் படித்த திமிரென்றாய்
மெல்ல அழுததோடு
அமைதி காத்தேன்
அமைதியும் ஒரு வகை
அகம் பாவம் தானென்றாய்
ஊமையாய் உலவினேன்
’ஊமை ஊரைக் கெடுக்கும்
பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்’, என்று
பழமொழி கொண்டு
பலமாகத் தாக்கினாய்
நீ குற்றம் சொல்வதிலேயே
குறியாயிருப்பவன் என்பதா
இப்போதெல்லாம்சும்மாயிருத்தலே
சுகமென்றிருக்கிறேன்
மூளையைக் கூர்தீட்டி
அதற்கொரு பழமொழியை
இதற்குள் தேடியிருப்பாயே!
சொல்லித் தொலை
என்ன செய்ய?
கேட்டுத் தொலைக்கிறேன்.
- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக