ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நகரும் அதிசயம்…


நகரும் அதிசயம்


ஆனித்தேர் பார்க்க வேண்டுமென்றால் தட்டாக்குடித்தெரு சரசுப்பெரியம்மையோடுதான் போக வேண்டும்… கைகளைப் பிடித்தபடி அவளிடம் கதை கேட்ட தேர் நாட்கள் தேனானவை. முழுத்தேரைச் செய்யத் தச்சர்கள் முயன்றபோது ஆகாயத்தில் பறந்ததால் இப்போதுள்ள தேரெல்லாம் முக்காலரைக்கால் அளவு தண்டாதென்பாள் புதுத்தேர் செய்தபின் தத்தம் உளியால் சுண்டுவிரலை அறுத்துக் குருதிவடித்துத் தச்சர்கள் தச்சுக்கழிப்பரென்பாள். சுதந்திரம் பெற்ற ஆண்டின் ஆனித்தேர் விழாவில் நெல்லையப்பர் தேர் உச்சியில் தேசியக்கொடி பறந்ததென்பாள் எழுபத்தேழில் தேர்கிளம்பும் முன் கிடாவெட்டித் தேரடிமாடனுக்குப் பலி தராததால் லாலா சத்திர முக்கில் தடிபோட்ட நாலுபேரைத் தேர் நசுக்கிக்கொன்றதென்பாள். குழந்தை பிறந்தவுடன் தேரடி மாடனுக்குப் பொங்கல் வைக்க வில்லையென்றால் அர்த்தஜாமத்தில் அலறி அழுமென்பாள். எந்தக் கடை முன் தேர்நிற்கிறதோ அவர்கள் பொங்கல் வைத்தபின்தான் அடுத்தஅடி நகருமென்பாள் மறுநாள் தேர்வடம் பார்க்கக் கங்காளநாதர் வருவாரென்பாள் உள்ளிருந்த உற்சவரைப் பற்றி அவள் சொன்னதை விடத் தேர் பற்றிச் சொன்னவை அதிகம். அந்த ஆனித்தேரைப் போல சரசுப் பெரியம்மையும் நகரும் அதிசயம் உயிருள்ள உலவும் தொன்மம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக