பயண மரணம்
பரபரப்பான சாலைகளில் தொடங்குகின்றன
நம் ஓட்டமிகு ஓயாத “காலைகள்“;
மின்சாரத் தொடர் வண்டித் தொங்கல்களில்
முடிகின்றன… நம் மயக்கந்தரு “மாலைகள்”.
பாற்கடலுமற்றுப் பஞ்சணையுமற்றுச்
சன்னல்களில் சாய்ந்தபடி
கணநேரச் சயனங்களுமுண்டு சில நாட்களில்
பூங்கா நகர்த் தூங்கா நிலையத்தில்
நடைபாதை சிமிண்ட் தளத்திற்குத்
தண்டவாளத்திலிருந்து தாவி ஏற
முயல்கிறது
நகரத்தின் விரைவறியா – அச்
சின்னஞ்சிறு அணில் குஞ்சு.
யாரும் எதிர்பாராக் கணத்தில்
அதைக் கொத்தித் தூக்கத் துடித்த
காகங்களைத் தண்டவாளத்திலிறங்கி
விரட்டி விடுகிறார் அக்கிராமத்து மனிதர்
வலப்புறமிருந்து விரைந்து வந்த
தொடர்வண்டி ஏறிச் சின்னாபின்னமாகிறது
அச்சின்ன அணில்.
பேயறைந்து அவர் நிற்க
காகிதக் குவளைகளோடும்
கோக் பாட்டில்களோடும்
வாக்மென் பாதசாரிகளுடனும்
வருத்தமற்றிருந்தது
எப்போதும் போல் இயல்பாயிருந்தது
அந்நிலையம்
பத்து நிமிடங்களுக்கு முன் தண்டவாளம்
கடந்தவன் ரத்தச்சகதியாக மாறியதையும்
அமைதியாகப்
பார்த்ததைப் போல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக